''அதிகாரத்தில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருப்பதில் அர்த்தமில்லை'' என்று பா.ஜ.க.வின் அகில இந்திய செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''மக்களவை வரலாற்றில் இல்லாத அளவு ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க குதிரை பேரத்தில் இறங்கியது, தகாத முறையில் செயல்பட்டுள்ளது.
மக்களவையில் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருந்தாலும் மக்கள் மன்றத்தில் இந்த அரசு நம்பிக்கையை இழந்துவிட்டது. இருந்தாலும் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
விலைவாசி உயர்வுர்வாலும், பணவீக்கத்தாலும், விவசாயிகளின் தீராத பிரச்சினையாலும், இந்த அரசு செயல் அற்ற அரசாக உள்ளது. பணம் வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தண்டிக்க மக்களவையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.
தமிழக மீனவர்கள் அன்றாடம் செத்து செத்துப்பிழைக்கும் நிலையில் உள்ளனர். சிங்கள கடற்படை நம் எல்லைக்குள்ளேயே வந்து மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டு அவர்களது உடமைகளை பறித்து சென்று விடுகிறது. இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
கச்சத்தீவை திரும்ப பெற டெல்லி சென்றுள்ள முதல்வர், பிரதமரை வலியுறுத்த வேண்டும். அதிகாரத்தில் உள்ள இவர்கள் உண்ணாவிரதம் இருப்பதில் அர்த்தமில்லை.
பா.ஜ.க. தலைமையை ஏற்று அத்வானி பிரதமராக ஒப்பு கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவோம்.
தமிழகத்தில் மின்பற்றாக்குறைக்கு ஜெயலலிதாவை குறை சொல்வதில் அர்த்தமில்லை. ஆட்சியில் உள்ளவர்கள் தான் இதை சரிசெய்ய வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறினார்.