''தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல் பிரச்னைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்'' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரையில் அனைத்து பேரூராட்சிகளின் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கையேடுகளை வெளியிட்ட அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மீனவர்களுக்காக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது.
மீனவர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதை உண்ணாவிரதப் போராட்டம் மூலம் தி.மு.க வெளிப்படுத்தி உள்ளது. போராட்டத்தின் பலனாக மத்திய அரசு சார்பில் டெல்லியில் உள்ள சிறிலங்க தூதரக அதிகாரிகளை அழைத்து தமிழக மீனவர் தாக்கப்பட்டது குறித்து பேசப்பட்டுள்ளது. இது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.
தமிழக முதல்வர் குறிப்பிட்டது போல தமிழக மீனவர் பிரச்னைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும். கச்சத் தீவை மீட்க தனியாக போராட்டம் நடத்துவது குறித்து தி.மு.க தலைமைதான் அறிவிக்க வேண்டும்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.