இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதைக் கண்டித்து கடந்த 13 நாட்களாக ராமேஸ்வரர் பகுதி மீனவர்கள், கடலுக்கு செல்லாமல் பேராட்டம் நடத்தி வருவதைத் தொடர்ந்து இன்றைய தினம் அந்த மீனவர்களின் பிரதிநிதிகள் 7 பேர் முதலமைச்சர் கருணாநிதியை தலைமைய் செயலகத்தில் சந்தித்து தங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்கள்.
சிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழக மீனவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை 1 லட்ச ரூபாயிலிருந்து மூன்று லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
படுகாயமடைந்த மீனவர்களுக்கு ரூ.50,000ம் சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000ம் வழங்கப்படும். மீன் பிடிக்கச் செல்லும்போது சிறிலங்கா கடற்படை தாக்குதலில் பலியாகி ஆதரவற்றுப்போகும் குடும்பங்களுக்கு இத்தொகை ரூ.5 லட்சமாக வழங்கப்படும்.
தமிழக மீனவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்திட மத்திய அரசு மூலமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தை சார்ந்த மத்திய அமைச்சர் மற்றும் கடலோர மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பிர்கள் கொண்ட குழு ஒன்று விரைவில் புதுடெல்லி சென்று பிரதமரை சந்தித்து மீனவர் பாதுகாப்பு குறித்து சிறிலங்கா அரசை வலியுறுத்த அனுப்பப்படுவார்கள்.
முதலமைச்சர் அறிவித்த இந்த முடிவுகளுக்கு மீனவர்களின் சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டு தங்கள் வேலை நிறுத்தை திரும்பப்பெற்று மீண்டும் மீன் பிடிக்க செல்வதாக கூறிச் சென்றார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.