வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி சுமூகமாக முடித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. நாடாளுமன்றத்துக்கு உடனடி தேர்தல் வந்தால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலுக்குச் செல்ல தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க வேண்டும். இதற்காக விரைவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
குருவை கைது செய்திருப்பது வேதனைக்குரிய விஷயம். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க வேண்டும். உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.