''எத்தனை தோல்விகள், தடைகள், சோதனைகள் வந்தாலும் சேது சமுத்திர திட்டத்துக்கு நிச்சயமாக இறுதி வெற்றி கிடைக்கும். அந்த வெற்றியை பெற்றே தீருவோம்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சகோதரர் சக்திவேல் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் கருணாநிதி, யார் யார் தேர்தல் நேரத்தில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலே சேது சமுத்திர திட்டத்திற்காக வாதாடினார்களோ, சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வந்தே தீருவோம் என்று சபதம் வைத்தார்களோ, அப்படி வைத்தவர்கள் இன்றைக்கு அந்த திட்டம் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றார்.
பாலுவைப்போல சேது சமுத்திர திட்டமும் வெற்றிபெற வேண்டும். அவரால் நிச்சயம் இந்த திட்டத்துக்கு வெற்றியைத் தேடித்தர முடியும். ஒரு சாதாரண மனிதனான இந்த பாலு, மிகப்பெரிய சேது திட்டத்தை கொண்டு வருவதா, அவருக்கு இந்த சிறப்பு கிடைப்பதா என்பதற்காக இந்த திட்டத்தை பலரும் எதிர்க்கிறார்கள் என்று கருணாநிதி கூறிப்பிட்டார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்களும் இப்போது இதனை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறார்கள். எத்தனை தோல்விகள், தடைகள், சோதனைகள் வந்தாலும் சேது சமுத்திர திட்டத்துக்கு நிச்சயமாக இறுதி வெற்றி கிடைக்கும். அந்த வெற்றியை பெற்றே தீருவோம் என்றார் கருணாநிதி.