த‌ஞ்சாவூ‌ரி‌ல் ஜூலை 15-ல் அரசு கேபிள் டி.வி தொடக்கம்!

திங்கள், 30 ஜூன் 2008 (10:52 IST)
தஞ்சாவூரில் ஜூலை 15ஆம் தேதி முதல் அரசு கேபிள் டி.வி. தனது சேவையை தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசவெளியிட்ட செய்திக் குறிப்‌பி‌ல், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி முதல்வர் கருணாநிதி அரசு அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தஞ்சாவூர், கோவை, வேலூர், திருநெல்வேலியில் "டிஜிட்டல் ஹெட் என்ட்' கட்டுமான வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஜூலை 15ஆம் தேதி பணிகள் முடிந்து உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும், "சப்- எம்.எஸ்.ஓ.'க்களுக்கும் இணைப்புகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மூன்று டிஜிட்டல் ஹெட் என்ட்-க்கான இயந்திரங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை வந்துள்ளன. இவை இரண்டு நாட்களில் தஞ்சாவூர், கோவை, வேலூருக்கு அனுப்பப்படும். பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, ஜூலை 15ஆம் தேதி தஞ்சாவூரிலும், ஆகஸ்‌ட் 15ஆம் தேதி கோவை, வேலூர், திருநெல்வேலியிலும், செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையிலும் அரசு கேபிள் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கும்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடம் இருந்து சேவைகளைப்பெற விரும்பும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மற்றும் சப்-எம்.எஸ்.ஓ.-க்களிடமிருந்து 10,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை பரிசீலனையில் உள்ளன.

தொலைக்காட்சி சேனல்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம், உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சப்-எம்.எஸ்.ஓ.-க்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணம் ஆகியவை பற்றி விரைவில் அறிவிக்கப்படும். இது குறித்து தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்