நோய்களை தரக் கூடிய, சுற்றுச் சூழல் மற்றும் விவசாயத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட் நிறுவனம் அங்கு வருவதை அ.இ.அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்'' என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காரைக்குடியில் 43.25 ஏக்கர் நிலத்தை தூத்துக்குடி ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் அலுமினியம் புளோரைடு தொழிற்சாலை அமைக்க 15 வருட குத்தகையில் தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்த தொழிற்சாலை காரைக்குடியில் வந்தால் அந்த பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அலர்ஜி, மூட்டு வலி, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு புற்றுநோய், பல் சம்பந்தப்பட்ட நோய், சிறுநீரகம் சம்பந்தமான நோய், குடல் நோய், தைராய்டு, ஆண்மை இழப்பு, மூச்சுத் திணறல் ஆகிய நேய்களால் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருக்கிறது.
இது மட்டும் அல்லாமல், நிலத்தடி நீர் அறவே மாசுபட வாய்ப்பு இருப்பதாகவும், இயற்கை மாசுபடும் என்றும், விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நோய்களை தரக் கூடிய, சுற்றுச் சூழல் மற்றும் விவசாயத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு நிறுவனம் அங்கு வருவதை அ.இ.அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்.
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு 43.25 ஏக்கர் நிலத்தை, 15 ஆண்டு கால குத்தகைக்கு அடிமாட்டு விலையில் தாரைவார்த்துக் கொடுத்த அரசைக் கண்டித்தும் சிவகங்கை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 30ஆம் தேதி காரைக்குடி ஐந்து விலக்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.