தமிழகத்தில் 2ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாது: செங்கோடன் அறிவிப்பு!
சனி, 28 ஜூன் 2008 (09:50 IST)
டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது.
பழைய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியை நீக்க கோரியும், டீசல் மீதான வரியை ரத்து செய்ய கோரியும், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சுங்கவரி வசூலிக்க ஒரு கமிட்டியை நியமிக்க கோரியும், 2004ஆம் ஆண்டு முதல் வசூலிக்கப்பட்டு வரும் சேவை வரியை ரத்து செய்ய கோரியும் நாடு முழுவதும் ஜூலை 2ஆம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அதன் தலைவர் செங்கோடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சேவை வரியை மட்டும் ரத்து செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் அனைத்து இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு மட்டும் போராட்டத்தில் இருந்து விலகி இருக்கிறது.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தனது போராட்ட நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. எனவே, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்தப்படி தமிழகத்தில் ஜுலை 2ஆம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் என்று செங்கோடன் கூறினார்.