பா.ம.க.வினரை கைது செய்யும் எண்ணமில்லை: டி.ஜி.பி!
திங்கள், 23 ஜூன் 2008 (15:42 IST)
''பா.ம.க.வினர் மீது வழக்குப்போட்டு அவர்களை கைது செய்யும் எண்ணம் எதுவும் காவல்துறைக்கு இல்லை'' என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.
பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய காவல்துறை முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாற்றியிருந்தார்.
இதை காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் மறுத்துள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கும்மிடிப்பூண்டியில் அண்மையில் செயல் இழந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நடந்த விசாரணையில் பழைய இரும்பு கழிவுகளை அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததில் அவை கலந்து வந்துவிட்டது தெரியவந்துள்ளது. அயல் நாடுகளில் அவை ராணுவத்தால் தேவையற்றவை என்று கைவிடப்பட்டவையாகும்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு மீது கைது ஆணை எதுவும் நிலுவையில் இல்லை. இதுவரை அவர் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. அவரது பேச்சு தொடர்பாக இதுவரை புகார் செய்யவில்லை. பா.ம.க.வினர் மீது வழக்குப்போட்டு அவர்களை கைது செய்யும் எண்ணம் எதுவும் காவல்துறைக்கு இல்லை.
சிவில் வழக்குகளில் தலையிடுவதோ, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதோ கூடாது என்று காவல்துறையினருக்கு எச்சரிக்கை செய்துள்ளோம். காவல்துறையினர் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக தேனி மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஊடுருவல் ஒடுக்கப்பட்டு விட்டது. எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கு விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறினார்.