அணுசக்தி ஒப்பந்தம்: கருணாநிதி தீர்வு காண வேண்டும்! இடதுசாரிகள்!
திங்கள், 23 ஜூன் 2008 (10:09 IST)
அணு சக்தி ஒப்பந்தத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டை நீக்கி தீர்வு ஏற்படுத்த, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூத்த தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி தலையிட வேண்டும் என இடதுசாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவுடன் இந்தியா அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதில் காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மத்தியில் உள்ள கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படும் நிலை நிலவுகிறது.
இந்தநிலையில் அணு சக்தி ஒப்பந்த விவகாரம் குறித்து தங்களது நிலையை தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தில் கருணாநிதியை இடதுசாரி கட்சித் தலைவர்கள் நேற்று சந்தித்தனர். ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின் பிரகாஷ் கரத், ராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் ஒப்பந்தம் குறித்து இறுதி நிலையை எடுக்குமாறு இடதுசாரிகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்தநிலையில், அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் எங்களது நிலை குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூத்த தலைவர் கருணாநிதியிடம் எடுத்துரைத்தோம். மேலும் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே உள்ள உறவில் பிளவு ஏற்பட்டால், மதவாத கட்சிகள் பலனடையும். எனவே உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கருணாநிதி எங்களைக் கேட்டுக் கொண்டார்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரம் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே இந்த விவகாரத்தில் இடதுசாரி கட்சிகள் மீண்டும் ஆலோசனை நடத்தும். முதல்வர் கருணாநிதியுடன் தொடர்ந்து பேசுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 ஆண்டுகளை முழுமையாக்குமா? என்பது குறித்து நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது என்று அவர்கள் கூறினார்.