ஈரோடு அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமானை செந்நாய்கள் துரத்தியதால் அணை தண்ணீரில் குதித்து பரிதாபமாக இறந்தது.
ஈரோடு அருகே உள்ளது அந்தியூர். இங்குள்ள வரட்டுப்பள்ளம் அணையை சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, செந்நாய் மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறது.
நேற்று மாலை வரட்டுப்பள்ளத்தில் தண்ணீர் குடிக்க புள்ளிமான் ஒன்று வந்தது. இந்த மானை வனப்பகுதிக்குள் நோட்டமிட்ட செந்நாய் கூட்டம் அணைப்பகுதியில் புள்ளிமனை சுற்றிவளைத்தது. இதனால் தப்பிக்க வழியில்லாத புள்ளிமான் வேறுவழியின்றி அணை தண்ணீரில் எட்டிகுதித்து நீர்தேக்கத்திற்குள் நீந்தி சென்றது.
இதனால் ஏமாற்றமடைந்த செந்நாய்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. ஆனால் நீண்ட நேரம் தண்ணீரில் நீந்திய புள்ளிமான் சோர்வாகி இறந்துவிட்டது. பின் வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் இறந்த மானை பரிசோதனை செய்து பின் மற்ற விலங்குகளுக்கு உணவாக வனப்பகுதிக்குள் இறந்த மானின் சடலத்தை வீசிவிட்டு சென்றுவிட்டனர்.