சேலத்தில் பொதுமக்களை திடீரென கடிக்க தொடங்கிய தெரு குதிரையை பொதுமக்கள் பிடித்து கட்டிப்போட்டதால் பரிதாபமாக இறந்தது.
சேலம் அம்மாப்பேட்டை திரு.வி.க. சாலையில் தெருநாய்கள், குதிரைகள் மற்றும் ஆடுகள் என எப்போதும் மந்தை, மந்தைகளாக திரிந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சிக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் சுற்றிதிரிந்த குதிரை ஒன்று திடீரென கனைத்து அவ்வழியாக சென்ற பொது மக்களை துரத்தி, துரத்தி கடிக்க தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்களிடம் பீதி ஏற்பட்டது.உடனே மாநகராட்சி மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகியும் எந்த அதிகாரிகளும் அங்கு வராத காரணத்தால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பெரிய கயிறு மூலம் குதிரைக்கு சுருக்கு வைத்து பிடித்தனர். பின் கால்களையும் கட்டிப்போட்டனர். கழுத்தில் கயிறு இறுக்கிய நிலையில் அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் குதிரையை கட்டிபோட்டனர்.
இதன் காரணமாக சிறிது நேரத்தில் அடாவடிசெய்த குதிரை சுருண்டு விழுந்து இறந்தது. இதற்கு பின் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் வந்து இறந்த குதிரையை அகற்றினர். குதிரையிடம் கடிபட்டவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.