''ஜனநாயக அரசியலைப் பொருத்தவரை அ.இ.அ.தி.மு.க வெகுதூரத்தில் விலகி நிற்பதால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருப்பது மிகவும் கவலை தரக்கூடிய விஷயம். மத்திய அரசின் மிக மோசமான தோல்வியாக இதைக் கருத வேண்டும். ஏகபோக முதலாளிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தாவிட்டாலும், சிறு அளவில்கூட கட்டுப்படுத்தாததுதான் இந்த நிலைக்குக் காரணம் என கட்சி கருதுகிறது.
தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளுடனான கூட்டணியில் பிளவு ஏற்படுவது தமிழக அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறோம். அ.இ.அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி சேரக்கூடும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இது யதார்த்தமான சூழ்நிலையில் இருந்து மாறுபட்ட செய்தியாகும்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை அ.இ.அ.தி.மு.க எடுத்தாலும், அந்த நிலையிலும் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஜனநாயக அரசியலைப் பொருத்தவரை அ.இ.அ.தி.மு.க வெகுதூரத்தில் விலகி நிற்பதால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வரதராஜன் கூறினார்.