திருமணமாகாத 50 வயதை கடந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.400 உதவித் தொகை: கருணாநிதி!
சனி, 21 ஜூன் 2008 (12:18 IST)
''திருமணமாகாமல் 50 வயதைக் கடந்த ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.400 உதவித் தொகை வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் 2வது நாளாக கடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ள பொறுப்புகள், வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகள் ஆகியவற்றை மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்திடப் பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் மக்களாட்சியின் மாண்பு சாதாரண மக்களுக்கும் தெரியும்.
அதிகாரிகள் முழுமையாக, மனநிறைவாக இயங்காவிட்டால் ஆட்சித் தேர் ஓர் அங்குலம் கூட நகராது என்பதை நன்கறிவேன். சென்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட 9 முடிவுகளையும், இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் நீங்கள் விரைவாக நிறைவேற்றித் தரவேண்டும்.
சட்டம் -ஒழுங்கைப் பாதுகாப்பதில் மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இப்போதுள்ள ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பட வேண்டும். இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும்.
உத்தபுரம் தீண்டாமைச் சுவர் காரணமாக எழுந்த பிரச்னையில் மதுரை மாவட்ட ஆட்சியர் எனது அறிவுரைகளை ஏற்று பணியாற்றியதால், அங்கே ஒரு சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒவ்வொரு பிரச்னை உருவாகின்ற நேரத்திலும் அதை உடனடியாக தெரிவிக்க வேண்டியவர்களுக்கு தெரிவித்து, அப் பிரச்னையை சுமூகமாகத் தீர்த்து வைக்கின்ற காரியத்தில் மாவட்ட ஆட்சியர்கள் அக்கறை காட்ட வேண்டும்.
முதியோர், விதவைப் பெண்களுக்கு வழங்குவது போல், வாய்ப்பு வசதியற்று திருமணம் ஆகாமல் 50 வயதை எட்டி, உழைத்துச் சம்பாதிக்க முடியாத ஏழை, எளிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 400 உதவித்தொகை வழங்கப்படும்' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.