''சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கடைசி வரை போராடுவேன். போராடி வெற்றிபெறுவேன்'' என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
தேசிய நண்பர்கள் பேரவை சார்பில் எழுத்தாளர் ஆ.கோபண்ணா எழுதிய சேது சமுத்திர திட்டம் ஏன்? எதற்காக? என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
புத்தகத்தை வெளியிட்டு மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை டி.ஆர்.பாலு பேசுகையில், மதுரையில் 2005-ம் ஆண்டு சேது சமுத்திர திட்ட தொடக்கவிழா முடிந்த உடன் சோனியாகாந்தி, இந்த திட்டத்தை விரைந்து அடுத்த தேர்தலுக்குள் முடித்து விடுங்கள் என்று என்னிடம் கூறினார். அந்த கடமையை இதுவரை செய்ய முடியவில்லையே என்ற தவிப்பும், ஆதங்கமும் என் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிகிறது.
சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கடைசி வரை போராடுவேன். போராடி வெற்றிபெறுவேன்.
திட்டம் வரும்போது பிரச்சினை வரும். பிரச்சினை வரும்போது கவலைப்படாமல் புல்டோசர் போல போக வேண்டும். நான் வெட்டவெட்ட துளிர்விடுவேன். அவர்கள் என்நிழலைத்தான் வெட்டுகிறார்கள். இது புனித பயணம். இதில் யாரும் குறுக்கிட முடியாது. அந்த பயணத்தில் வெற்றிபெறுவேன் என்று டி.ஆர்.பாலு கூறினார்.