இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் நாத்திக பிரசாரத்தை அனுமதிக்க கூடாது: இல.கணேசன்!
ஞாயிறு, 15 ஜூன் 2008 (13:54 IST)
இந்துக்கள் உணர்வை புண்படுத்தும் நாத்திக பிரசாரத்தை அனுமதிக்க கூடாது என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு மதத்தினரது உணர்வுகளையும் புண்படுத்துகின்ற வகையில் பேசு வதோ எழுதுவதோ சைகை காட்டுவதோ கூடாது என சட்டம் தெளிவாக சொல்லியிருக்கின்ற போதிலும் தொடர்ந்து இந்து மத உணர்வு பகிரங்கமாக பொது இடங்களில் புண்படுத்தப்பட்டு வருகிறது. பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் நாத்திக விழா என்ற பெயரில் தீமிதித்தல் போன்ற இந்து மத பழக்கங்களை விமர்சனம் செய்வதற்கு முனைந்துள்ளனர்.
காவல் துறையும் அவர்களது பொது கூட்டத்திற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. அரசாங்கமே தடை செய்ய வேண்டிய ஒரு நிகழ்ச்சியை அரசாங்கமே அனுமதி கொடுத்த காரணத்தால், மக்களது உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் குமார வேலு, தென் சென்னை மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் மற்றும் ஏனைய பாரதீய ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காவல் துறை கைது செய்துள்ளது.
நாத்திக பிரசாரம் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நடை பெற்றாலும், ஆதரவு பெறவில்லை. தோல்வியே கண்டிருக்கிறது. இத்தகைய முயற்சிக்கு துணை போவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று இல.கணேசன் கூறியுள்ளார்.