மலிவான விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும்; ஜெயலலிதா!
வெள்ளி, 13 ஜூன் 2008 (14:06 IST)
விவசாயிகளுக்கு உரம், விதை நெல், பயிர்க் கடன் ஆகியவற்றை மலிவு விலையில் உடனடியாக கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கும் சூழ்நிலையில் விதை நெல், உரங்கள் தட்டுப்பாடு பெருமளவுக்கு இருப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
ஒரு ஏக்கருக்கு மூன்று மூட்டை டி.ஏ.பி. உரம் தேவைப்படுகையில், சில கூட்டுறவு சங்கங்களில் ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி. உரமும், சில கூட்டுறவு சங்கங்களில் மூன்று ஏக்கருக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி. உரமும் வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகபட்சம் ரூ.486 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உரத்தை ரூ.800 அளவுக்கு விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். யூரியா, பொட்டாஷ், வேப்பம் புண்ணாக்கு போன்ற உரங்களும் தனியாரால் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
நாட்டின் முதன்மைத் தொழிலான வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு தற்போது தேவைப்படும் உரம், விதை நெல், பயிர்க் கடன் ஆகியவற்றை மலிவு விலையில் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.