தமிழகத்தில் லாரி கட்டணம் 20 ‌விழு‌க்காடு உயர்வு!

வியாழன், 12 ஜூன் 2008 (09:39 IST)
டீசல் விலை உயர்வு காரணமாக தமிழக‌த்த‌ி‌ல் லாரி வாடகை கட்டணம் இ‌ன்று முத‌ல் 20 ‌விழு‌க்காடாக உயர்த்தப்படுகிறது எ‌ன்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செங்கோடன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அவ‌ர் சேல‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே நஷ்டத்தில்தான் தொழிலை நடத்தி வந்தனர். அத்துடன் லாரிகளுக்கான உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம், டயர் விலை உயர்வு போன்றவைகளையும் உரிமையாளர்களே ஏற்க வேண்டியது இருந்தது. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று எண்ணுவதற்குள், தற்போது மத்திய அரசு டீசல் விலையையும் உயர்த்தி விட்டது.

அதன்படி, லாரி வாடகை கட்டணத்தை 20 ‌விழு‌க்காடு வரை உயர்த்த முடிவு செய்தோம். நாளை (இன்று) முதல் கட்டண உயர்வை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே கிலோ மீட்டருக்கு ரூ.14 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக, கிலோ மீட்டருக்கு ரூ.18 வரை வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே கூடுதலாக கிலோ மீட்டருக்கு ரூ.4 வரை கட்டணம் உயரும் எ‌ன்று செங்கோடன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்