இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகவும், நிர்வாக திறமையின்மை காரணமாகவும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும், கட்டுமானப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதன் விளைவாக நாட்டின் பண வீக்கம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்துகொண்டு வருகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தி அனைத்து தரப்பு மக்களையும் வாழ்க்கையின் விளிம்பிற்கே தள்ளி இருக்கிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு முதலில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில், தற்போதைய உயர்வையும் சேர்த்து இதுவரை 8 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.
டீசல் என்பது வெறும் எண்ணெய் மட்டுமல்ல; அதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி. டீசல் விலை உயர்ந்தால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். எல்லா வகை பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாவதுடன், டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
உள்நாட்டு எரிபொருட்களின் விலையை உயர்த்தும்போதெல்லாம் மத்திய அரசு உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் என்ற வாதத்தை அடிக்கடி தொடர்ந்து கூறி, விலையேற்றத்திற்கான காரணத்தை நியாயப்படுத்தி வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவைகளும் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை. உள்நாட்டிலேயே பெறப்படும் கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச சந்தை விலையை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 5 விழுக்காடு சுங்க வரி குறைப்பின் மூலம் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை.
ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாவிட்டாலும், மண்ணெண்ணெய் விநியோகம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு மண்ணெண்ணெய் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
பெட்ரோலியப் பொருட்களின் தற்போதைய விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியைக் குறைத்து மத்திய அரசுக்கு இந்த நெருக்கடியான தருணத்தில் உதவ முன்வர வேண்டும்." என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.