பெட்ரோல் விலை உயர்வு: தமிழகத்தில் ஜூன் 7ல் முழு அடைப்பு!
புதன், 4 ஜூன் 2008 (20:02 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளதைக் கண்டித்து தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என்.வரதராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் விலை உயர்வைக் கண்டித்துள்ளதுடன், விலை உயர்வு அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 7ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
விலை உயர்வு கொடுமையானது என்று குறிப்பிட்டுள்ள என்.வரதராஜன், இது சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களையும் பாதிப்பதுடன் எல்லாப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழி வகுத்துள்ளதாகக் கூறினார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இடதுசாரிகள் தெரிவித்த ஆலோசனைகளை நிராகரித்ததுடன், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளதால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.