பத்தாம் வகுப்பு: தவறியவர்களுக்கு ஜூலையில் மறுதேர்வு!
வெள்ளி, 30 மே 2008 (11:56 IST)
இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தவறியவர்களுக்கு வருகிற ஜூலை மாதம் சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மார்ச் 2008 பொதுத் தேர்வு எழுதியவர்களில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் ஜூலை மாதம் நடக்கவுள்ள சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவம் ஜூன் 3 முதல் 6 வரை வழங்கப்படும். பள்ளி மபவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து ஜூன் 6 மாலை 5 மணிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
மார்ச் 2008க்கு முன்பு தேர்வெழுதிய மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், சிறப்புத் துணைத் தேர்வு எழுத விரும்பினால், சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவஞ்சலில் ஜூலை 6க்குள் அனுப்ப வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி. சிறப்புத் துணைத் தேர்வு அட்டவணை:
3.7.2008 மொழிப்பாடம் முதல் தாள்
4.7.2008 மொழிப்பாடம் இரண்டாம் தாள்
5.7.2008 ஆங்கிலம் முதல் தாள்
7.7.2008 ஆங்கிலம் இரண்டாம் தாள்
8.7.2008 கணிதம்
10.7.2008 அறிவியல்
11.7.2008 சமூக அறிவியல்
தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.40 மணி வரை நடைபெறும்.