வேலூர் தீ விபத்தால் மாணவர் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு!
வெள்ளி, 30 மே 2008 (11:37 IST)
வேலூர் தீ விபத்தில் எரிந்துபோன விடைத்தாள்களுக்குச் சொந்தமான பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலூரில் தீ விபத்து நடந்த மதிப்பெண் கூட்டல் மையத்தில் 23,976 விடைத்தாள்கள் இருந்தன. தீ விபத்தில் 12,832 ஆங்கிலம் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் பாதிக்கப்பட்டன.
இதில் மதிப்பெண்ணைக் கணித்து மதிப்பீடு செய்ய முடிந்த நிலையில் 12,266 விடைத்தாள்கள் மீட்கப்பட்டன. தீ மற்றும் தீயணைப்புத் துறையினர் பாய்ச்சிய தண்ணீர் ஆகியவற்றினால் முழுமையாக எழுத்துக்கள் அழிந்து மதிப்பீடு செய்ய இயலாத நிலையில் 566 விடைத்தாள்கள் மீட்கப்பட்டன. இதில் பள்ளி மாணவர்களுடையது 480, தனித்தேர்வர்களுடையது 86.
விடைத்தாள்கள் முழுமையாகச் சேதமடைந்த மாணவர்களுக்கு அவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, அவர்கள் ஆங்கிலம் முதல் தாளில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது ஆங்கிலம் தவிர மற்ற 4 பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்களின் சராசரி, இதில் எது அதிகமோ அது அவர்களுடைய ஆங்கிலம் இரண்டாம் தாளின் மதிப்பெண்ணாக வழங்கப்பட்டுள்ளது. இதில் யாரும் பாதிக்கப்படவில்லை.
இவ்வாறு வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.