சென்னையில் பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு அனுமதி கிடையாது: தமிழக அரசு!
செவ்வாய், 27 மே 2008 (13:13 IST)
''சென்னையில் இனிமேல் இயக்குவதற்கு பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு அனுமதி கிடையாது'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை சரக இணை போக்குவரத்து ஆணையர் நாராயணமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் மானியம் மற்றும் மானியம் இல்லாத 10,000 ஆட்டோக்கள் வழங்க 1.3.07 அன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அரசு ஆணையின்படி, புதிதாக அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு சென்னையில் பதிவு செய்யப்படும் ஆட்டோக்கள், திரவ எரிவாயுவால் (எல்.பி.ஜி. கியாஸ்) இயங்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, சென்னையில் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
இதுதவிர, புதிதாக பதிவுக்கு கொண்டு வரும் ஆட்டோக்களாக இருந்தாலும் அல்லது தற்போது ஓடும் ஆட்டோக்களுக்கு பதிலாக புதுவாகன மாற்றம் செய்து பதிவு செய்யப்படுவதாக இருந்தாலும், இத்தகைய ஆட்டோக்கள் அனைத்தும் எல்.பி.ஜி. என்ற திரவ எரிவாயுவால் இயக்கப்படுவதாக இருந்தால் மட்டுமே, சென்னையில் ஓட அனுமதி வழங்கப்படும்.
பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோக்களாக இருந்தால், அவை எந்தக் காரணத்தைக் கொண்டும் சென்னையில் இயக்க அனுமதிச்சீட்டு வழங்க இயலாது என்று கூறியுள்ளார் சென்னை சரக இணை போக்குவரத்து ஆணையர் நாராயணமூர்த்தி.