தமிழகம், கர்நாடகத்தில் சாராயம் குடித்து 134 பேர் இறந்த நிகழ்வுக்கு அதில் கலக்கப்பட்ட "மெத்தனால்'தான் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் மாநிலம் முழுவதும் பழைய சாராய வியாபாரிகளைக் கணக்கெடுத்து கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தைத் தடயவியல் துறையினர் ஆய்வு செய்ததில் சாராயம் குடித்தவர்களின் உடல்நிலையை ஆய்வு செய்ததில் அவர்களின் சாவுக்கு மெத்தனால் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது என்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் உயர் அதிகாரி கூறினார்.
கொடிய விஷத்தன்மை உள்ள, பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயன மற்றும் அமிலத்தன்மை உள்ள பொருள்களிலேயே கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறது. இது தயாரிக்க ஒரு வாரம் முதல் 10 நாள்கள் பிடிக்கும். 100 மில்லி லிட்டர் கொண்ட எத்தில் ஆல்கஹால் அல்லது எரிசாராயம் ஆகியவற்றைக் கொண்டு 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்தால் 1,000 மில்லி எத்தில் ஆல்கஹால் கிடைக்கும்.
இதைக் குடிப்பதால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஆனால் சிலர் எத்தில் ஆல்கஹாலுக்குப் பதிலாக மெத்தனாலை வாங்கி 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து குடிக்கின்றனர். இது முதலில் கண் எரிச்சலைக் கொடுக்கும். பின்னர் கண் பார்வை மங்கி உயிரைப் பறிக்கும்' என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மெத்தனால் எடுத்துச் செல்லும் வாகனம், மிகுந்த பாதுகாப்புடன் அதை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நிறுவனத்தில் சேர்க்கும்வரை சீல் பிரிக்கக்கூடாது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.