''எங்களைப் பொறுத்தவரையில் மணல் கொள்ளை என்பது இருக்கக் கூடாது என்பது தான். அதற்காகத் தான் இந்த அரசு இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறது'' என்று ராமதாசுக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், மணல் விற்பனையில் தவறுகள் நடைபெறுவதாகவும், தமிழக அரசு மீது வழக்கு தொடர்வோம் என்றும் கடந்த இரண்டாண்டு காலமாக பா.ம.க. நிறுவனர் தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டேயிருந்தார்.
தற்போது நடைபெற்று வரும் நடைமுறையில் தானே அவர்கள் குறை கூறுகிறார்கள். ஏற்கனவே நடை முறையிலே இருந்த முறை பற்றி அடுக்கடுக்காக குறை சொன்னவர்களும் அவர்கள் தான். இப்போது அந்த முறையை மாற்றலாம் என்கிற போது இதற்கும் குறை சொல்பவர்கள் அவர்கள் தான். எப்படியும் குறை சொல்ல வேண்டுமென்று நினைப்பவர்களிடமிருந்து வேறெந்த கருத்தை எதிர்பார்க்க முடியும்.
இன்னும் சொல்லப் போனால், இந்த ஆட்சி 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட போதே இதுபற்றிய எண்ணம் இந்த அரசுக்கு வந்த போதிலும், நடைமுறையில் அனுபவபூர்வமாக எப்படி செயல்படுகிறது என்பதைக் கண்காணித்து வந்தோம். அந்த வகையில் தான் தற்போது இப்படியொரு மாற்றத்தைச் செய்யலாமா என்று எண்ணுகிறோம்.
முழுவதுமாக நடைமுறைக்கு வரும்போது, டாக்டர் ராமதாஸ் அறிக்கையிலே தெரிவித்தவாறு அமைச்சரவையிலே ஆய்வு செய்யப்பட்டு விரிவாக வெளியிடப்படும். எங்களைப் பொறுத்தவரையில் மணல் கொள்ளை என்பது இருக்கக் கூடாது என்பது தான். அதற்காகத் தான் இந்த அரசு இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று பொன்முடி கூறியுள்ளார்.