கள்ளசாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை: தா.பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்!

புதன், 21 மே 2008 (10:41 IST)
webdunia photoFILE
''கள்ள சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட நச்சு சாராயம் பலருடைய உயிர்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலி கொண்டுவிட்டது. மேலும் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பலர் கண்பார்வை இழக்கக் கூடும் என்ற கவலை தரும் செய்தியும் வந்துள்ளது.

கள்ளசாராயம் கடத்தப்பட்டு வந்ததும் அதுபல தமிழ்நாட்டவர் உயிரை பறித்துள்ளதும் தமிழ்நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாவுகளில் முடிந்ததால் இது செய்தியாக வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இது ஒரு லாபகரமான தொழிலாக நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையின் ஒரு பகுதியினர் இத்தகைய சக்திகளுடன் நிரந்தர கூட்டணி வைத்துள்ளனர் என்பதும் புலனாகிறது.

தமிழ்நாடு அரசு தற்போது நிகழ்ந்துள்ள பெருமளவிலான சாவுகளுக்கு பின்னராவது தமிழ்நாடு முழுமையிலும் கள்ள சாராய சாம்ராஜ்யத்தை ஒழிக்கும் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டு‌ம் எ‌ன்று தா.பாண்டியன் வ‌லியு‌று‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்