அ.இ.அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வருவதாக தமிழக அரசு மீது குற்றம்சாற்றியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளகரம், புழுதிவாக்கம் நகர அ.இ.அ.தி.மு.க. செயலரும், நகரமன்ற தலைவருமான பி.ஏ.ஜெயச்சந்திரனின் மகனும், நகரமன்ற துணைத் தலைவருமான மணிகண்டன் மற்றும் சில அ.இ.அ.தி.மு.க.வினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அதன் பிறகு அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஜெயச்சந்திரன் உட்பட அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள் சிலர் தி.மு.க.வில் சேரும்படி காவல்துறையினரால் மிரட்டப்பட்டுள்ளனர். இதேபோல, சோழிங்கநல்லூர் பேரூராட்சி அ.இ.அ.தி.மு.க. செயலர் முஸ்தபா, மாவட்ட பிரதிநிதியும், பேரூராட்சி வார்டு கவுன்சிலருமான குத்புதீன் ஆகியோர் இல்லங்களுக்கு தி.மு.க.வினர் சென்று அவர்களுடைய குடும்பத்தாரையும் வீட்டையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தி.மு.க.வினரை கைது செய்யாமல் அ.இ.அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் பொய் வழக்குப் போட்டனர்" என்று கூறியுள்ளார்.
மேலும், "திரிசூலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயசங்கர் என்பவரை தி.மு.க.வில் சேரும்படி வற்புறுத்திய போது அவர் அதற்கு மறுக்கவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதும். அதற்கு முகாந்திரம் இல்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருப்பதும் மிகுந்த வேதனைக்கூறிய விஷயமாகும்.
மாவட்ட அமைச்சரின் தூண்டுதலின் பேரில்தான், காவல்துறையினர் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்து வருவதாகத் தெரிகிறது. இத்தகைய செயல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ள ஜெயலலிதா,
அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், கட்சி தொண்டர்கள் மீதும் பொய் வழக்குகளைப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து அச்சுறுத்தி வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், (3.5.2008) நாளை மறுநாள் காலை 10 மணியளவில், ஆலந்தூர் தொகுதி, ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.