பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றெல்லாம் கருணாநிதி அறிவித்து கொண்டே வருகிறார். இதுவரை அவர் வெளியிட்ட அறிவிப்புகளையெல்லாம் கூட்டிப் பார்த்தால் 10 லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் முதலீடு, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளுக்கு ஒரு மரியாதை இருக்கும். சென்னையில் 2 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அறிவித்து, அதற்காக தரமணியில் நிலம் தரப்பட்டுள்ளது. இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. சலுகை என்ற பெயரில் இந்த நிலத்தை தனியாருக்கு அரசு தாரை வார்த்து கொடுத்துள்ளது.
ஆனால் தரமணியில் பழைய மகாபலிபுரம் சாலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப காரிடர் (ஐ.டி. காரிடர்) பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்களில் நிரப்பப்படாமல் மூன்றரை லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட தளங்கள் இன்னும் காலியாகவே கிடக்கிறது.
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் டாடா போன்ற நிறுவனங்கள் காலியாக கிடக்கும் இந்த கட்டிடங்களுக்கு செல்லாமல் தரமணியில் காலியாக கிடக்கும் அரசு நிலத்திற்கு ஏன் குறிவைக்கிறார்கள்?
அங்குதான் ஒரு சூட்சுமம் உள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்கா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவதற்கு இந்த அரசு அவர்களுக்கு துணைபோகிறது. அரசு நிலம் என்றால் பொதுநிலம்; பொது மக்களின் நிலம். அதனை தனியாருக்கு எப்படி தாரை வார்க்கலாம்? யாருடைய அனுமதியின் பெயரால் அந்த நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது?
அமைச்சரவையில் மட்டும் முடிவெடுத்தால் போதுமா? சட்டமன்றத்தில் இதுபற்றி கட்டாயமாக விவாதிக்க வேண்டும். எனவே இதுவரை அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பற்றியும், அறிவிக்கப்பட்டபடி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் சிறுதொழில்கள் வளர வேண்டும். இதற்கு சிறு தொழிற்சாலைகளை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும்.
ஆனால் டாடா, பிர்லா, அம்பானி நிறுவனங்கள் சிறிய தொழிற்சாலைகளை தொடங்க முன்வர மாட்டார்கள். நமது மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள்தான் இதற்கு முன்வருவார்கள். ஆனால் இவர்களுக்கு உதவ இந்த அரசு தயாராக இல்லை என்றார் ராமதாஸ்.