தொலைபேசி ஒட்டுக் கேட்பு புகார்: அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்! ஜெயலலிதா

ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (11:23 IST)
தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்த புகார் தொடர்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரது தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுகிறது. தலைமைச் செயலாளரின் பேச்சுகளைக் கூட ஒட்டுக் கேட்கின்ற அளவுக்கு நிர்வாகம் கீழ் இறங்கி வந்து விட்டதை நாட்டு மக்கள் நன்கு உணர வேண்டும். தொலைபேசி ஒட்டுக் கேட்பை மறைக்க அரசே முயற்சி மேற்கொள்ளும் போது, இந்த அரசால் அமைக்கப்பட்டு இருக்கும் "நீதி விசாரணை'' எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தலைமைச் செயலாளர் - ஊழல் தடுப்பு இயக்குனரிடையே நடந்த தொலைபேசி உரையாடலில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு, தலைமைச் செயலாளர் ஒருதலைப்பட்சமாக உத்தரவிடும் போக்கு, அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.

கர்நாடகாவில் முதலமை‌ச்சராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே மீது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தவுடன், அம்மாநிலத்தில் மாத்திரம் அல்லாமல் இந்தியா முழுவதும் அதன் அதிர்வலைகள் எழுந்தன. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். எதிர்க்கட்சியின் அலுவலக தொலைபேசியை ஒட்டுக் கேட்ட குற்றத்திற்காக அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன் தனது பதவியையே இழந்தார்.

அதைப் போலவே, தி.மு.க அரசின் உத்தரவின் பேரில், ஜனநாயகத்திற்கு விரோதமாக நிகழ்த்தப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்பு சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று முலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. சார்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு ஏ‌ப்ர‌ல் 28ஆ‌ம் தேதி (நாளை) காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்