சட்டப் பேரவையில் காங்கிரஸ்- அ.இ.அ.தி.மு.க. மோதல்!
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (19:56 IST)
தமிழகச் சட்டப் பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
சட்டப் பேரவையில் இன்று தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம், வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100 என ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடப்போவதாக அ.இ.அ.தி.மு.க. அறிவித்துள்ளதை வரவேற்பதாகவும், அதேநேரத்தில் கொடநாடு எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு வழங்கப்படுமா என்று கேட்டார்.
அதற்கு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், 'கொடநாடு' பற்றிக் காங்கிரஸ் உறுப்பினர் குறிப்பிட்டவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவாக தி.மு.க. உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தனர். இதனால் இருதரப்பிற்கும் இடையில் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
பா.ம.க. உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் டி.கே.சுதர்சனம், கொறடா பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோரும் இணைந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.
இருப்பினும் இயல்புநிலை திரும்பாத காரணத்தால் எழுந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "கொடநாடு எஸ்டேட் தொழிலாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.100 கூலி கொடுக்கப்படுமா என்றுதானே காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்கிறார்கள்" என்றார்.
இதற்கிடையில் அ.இ.அ.தி.மு.க. கொறடா கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுமென்றே 'கொடநாடு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், 'கொடநாடு' என்ற வார்த்தை ஆட்சேபத்திற்குரிய வார்த்தை இல்லை என்பதால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று அவைத் தலைவர் மறுத்துவிட்டார்.