சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மூலவர் சன்னதியிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த கோயிலில் பெரும்பாலான நேரங்களில் பக்தர்களைக் காண முடியும்.
நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த கோயில் வழக்கம் போல வழிபாடு களுக்கு பின்னர் பூட்டப்பட்டது. இன்று காலை 5.30 மணியளவில் கோயில் திறக்கப்பட்டதும் கால சந்தி பூஜைக்காக சுப்பிரமணிய அய்யர் என்ற குருக்கள் வந்துள்ளார்.
கபாலீஸ்வரர் வீற்றிருக்கும் மூலவர் சன்னதியை திறந்து உள்ளே சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த 2 உண்டியல்களில் ஒன்று உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காசுகள் சிதறிக் கிடந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குருக்கள் இது பற்றி கோயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மயிலாப்பூர் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்து தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் துரைராஜ், துணை ஆணையர் மவுரியா தலைமையில் காவலர்கள் விரைந்து வந்தனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. உடைக்கப்பட்ட உண்டியலில் கைரேகைகள் இருந்தது பதிவு செய்யப்பட்டது. மோப்ப நாயும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே காலை தரிசனத்துக்கு வந்த பக்தர்களின் விசாரணை நடத்தப்பட்டது. உண்டியலில் இருந்து கொள்ளைப் போன காணிக்கையின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து பணம் மட்டுமின்றி விலை உயர்ந்த நகைகளையும் காணிக்கையாக செலுத்துவதால் கொள்ளைப் போன காணிக்கையின் மதிப்பு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கோயிலின் உள்ளே ஆங்காங்கே வீடியோ காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த காமிராக்களை இயக்க விடாமல் செய்துள்ளனர். கபாலீசுவரர் சன்னதிக்கு செல்லும் கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. பூட்டை திறக்காமல் உள்ளே சென்றது எப்படி என்பது காவல்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.