முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் இரண்டு பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, அவரது நண்பர்கள் ஆசிரியர் பொன்ராஜ், சாக்ரடீஸ் ஆகியோர் ஆலங்குளத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து அவர்களை வெட்டியது. இதில் ஆலடி அருணா, ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே இறந்தனர். சாக்ரடீஸ் தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.
இது தொடர்பாக வடக்கன்குளம் கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா உள்பட 12 பேர் மீது ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் எஸ்.ஏ.ராஜா, வேல்துரை, பாலா என்ற பாலமுருகன், அழகர், ஆறுமுகம், கண்ணன், தனசிங் என்ற சீனிவாசன், பரமசிவன், டாக்ரவி, அர்ச்சுனன் ஆகிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் பென்னி, பாஸ்கர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.
இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பாஸ்கரன் நேற்று தீர்ப்பளித்தார்.
அப்போது, வேல்துரை, பாலமுருகன், அழகர் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். எஸ்.ஏ.ராஜா, ஆறுமுகம், கண்ணன், தனசிங் என்ற சீனிவாசன், பரமசிவன், அர்ச்சுனன் ஆகியோர் மீதான குற்றம் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்தார்.
இதைத் தொடர்ந்து 3 பேரின் தண்டனை விவரம் நாளை (இன்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி பாஸ்கரன் அறிவித்தார். அதன்படி நீதிபதி பாஸ்கரன், 3 பேரின் தண்டனை விவரத்தை இன்று அறிவித்தார்.