''பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சலுகையை வருகிற கல்வி ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிள்ள அறிக்கையில், உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்து நடுவணரசு நிறைவேற்றிய சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு ஏகமனதான தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு சமூகநீதிக்கான பயணத்தில் மற்றுமொரு மகத்தான வெற்றியாகும்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் இந்த இட ஒதுக்கீட்டிலிருந்து வசதி படைத்தவர்களை நீக்கி விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்த அறிவுரை ஆபத்தானது.
இட ஒதுக்கீடு வழங்குவதில் வசதி படைத்தவர்களுக்கு இல்லை என்று அரசியல் சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடப்பட வில்லை. இப்படி அரசியல் சட்டத்தில் குறிப்பிடாத ஒன்றை நீதிமன்றம் திணிப்பதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. அப்படி இடம் கொடுத்தால் பின்னர் அது எங்கேயோ கொண்டு போய் விட்டு விடும்.
இன்றைக்கு பிற்படுத்தப் பட்டவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று நீக்க இடம் கொடுத்து விட்டால், நாளைக்கே அதனை இட ஒதுக்கீட்டுச் சலுகை பெறும் இதர பிரிவினருக்கு நீட்டிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கி விடும் ஆபத்து ஏற்படும்.
எனவே இட ஒதுக்கீடு வழங்குவதில் வசதி படைத்தவர்களை நீக்கிவிட வேண்டும் என்று நிலைப் பாட்டை அரசும், சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும், தலைவர்களும் உடனடியாக எதிர்க்க முன் வரவேண்டும். அத்துடன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சலுகையை வருகிற கல்வி ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடுவணரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.