ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை: கருணாநிதி விளக்கம்!
ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (15:58 IST)
கர்நாடகாவில் முடிவெடுக்கக் கூடிய அளவிற்கு அரசு இல்லை என்பதால் ஒரு மாதத்திற்கு ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைக்கலாம் என்று கூறியிருக்கிறேனே தவிர, திட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சொத்துக்கள் சேதமும், வாகனங்கள் தீக்கிரையாவதும், மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிப்பதும் - தடுக்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன், ஒகனேக்கல் திட்டத்திற்காக இப்போது நடை பெறும் கிளர்ச்சியை; கர்நாடக மாநிலத் தேர்தல் முடியும் வரையில் நிறுத்தி வைக்க வேண்டுமென்று நமது தமிழக முதலமைச்சர் என்ற முறையில் தாங்கள் விடுத்த வேண்டுகோளை, தமிழ்நாட்டில் சில கட்சியினர் பெரிய துரோகம் என்றும்-சரணாகதி என்றும்- வர்ணித்து அறிக்கை விட்டுள்ளார்களே?
பல ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் ரயில் கவிழ்ந்து வரலாறு காணாத உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. அந்த வேதனையான சோகச் சூழ்நிலையில் கூட; அரியலூருக்கு அருகில் உள்ள சமூக விரோதிகள், அந்தகார இருட்டில் ஆற்றில் மிதந்த பிணங் களின் கை, காது, கழுத்துக்களில் அணிந்திருந்த நகை நட்டுக்களைத் திருடிக் கொண்டு போனார்கள் என்ற இதயமற்ற செயல்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் செய்திகளாக வெளி வந்தனவே - அதற்கு இடம் தராமல் இப்போது "விபத்து'' தவிர்க்கப்படுவதை அத்தகைய விஷமிகள் விரும்புவார்களாப விரும்ப மாட்டார்கள்!
மேலும் எனது அறிக்கையில் ஒகேனக்கல் திட்டம் அறவே கை விடப்படுகிறது என்று சொல்லவில்லை. கர்நாடக மாநிலத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. தற்போது அங்கே முடிவெடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு அரசு இல்லை. அதனால் ஒரு மாதத்திற்கு இதனை ஒத்திவைக்கலாம் என்று கூறியிருக்கிறேனே தவிர, திட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடவில்லை. பேரவையில் அறிவிக்காமல், அனை வரையும் கலந்து பேசாமல் அறிக்கை விடலாமா என்று சிலர் கேட்கிறார்கள்.
பேரவை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை. அனைத்துக்கட்சித்தலைவர்களையும் கலந்து கொண்டு பேரவையில் அறிவிப்பதென்றால், அதற்குள் இரண்டு மாநிலங்களிலும் பல உயிரிழப்புகளும், உடைமை நாசங்களும் ஏற்படுவதற்கு இடம் தந்து விடுவதாக அமைந்து விடும். அதற்காக அவசரமாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் தாங்கள் துரோகம் செய்து விட்டதாக பழ.நெடுமாறன் சொல்லுகிறாரே?
நெடுமாறன் போன்றவர்களுக்கு ஜெயலலிதாவின் "பொடா'' பாணி அரசியல் தான் துரோகமற்றதாகத் தெரியும்! அண்ணாவுக்கும்- அடுத்து காமராஜருக்கும்- பின்னர் குமரி அனந்தனுக்கும்- பிறகு மூப்பனார் அவர்களுக்கும் துரோகம் செய்தது "யார்?'' என்று கேட்டால் உண்மையான துரோகத்தின் மொத்த உருவத்தை அடையாளம் காணலாம். பாவம்; புலிகள் பெயர் சொல்லி பல வழிகளில் பொருளீட்டும் காகிதப் புலிகள்!
காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளுக்காகத்தான் தாங்கள் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்களே?
காங்கிரஸ் கட்சித் தரப்பிலிருந்து யாரும் அப்படிப்பட்ட வேண்டுகோளை என்னிடம் வைக்க வில்லை. இதைப்பற்றி பேசவும் இல்லை. அப்படி ஒரு கட்சியின் நலன் கருதி நான் அந்த அறிவிப்பை செய்யவில்லை. இரண்டு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை எண்ணி எடுக்கப்பட்ட முடிவுதான் அது. அதாவது மனித நேய முடிவு - மாநிலங்களின் ஒற்றுமைக்கான முடிவு.