தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது: ஜெயலலிதா!

ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (12:09 IST)
''ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது'' என்று அ.இ.அ.‌தி.மு.க க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைப் பொறுத்த வரையில், கர்நாடகத்தினுடைய தயவோ, அனுமதியோ தமிழகத்திற்கு தேவையில்லை. ஒகேனக்கல் தமிழ்நாட்டிற்குள் தான் இருக்கிறது. நமக்கு வருகின்ற காவேரி நதி நீரைத் தான் நாம் பயன்படுத்தப் போகிறோம்.

பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றும் போது, நாம் ஏன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது? எனவே, இந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. இதில் தலையிடுவதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை.

இப்போது கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும். பின்னர் பதவி ஏற்கும் புதிய அரசுடன் கலந்து பேசி, தேவைப்பட்டால் களம் காண்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலுக்கும், தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? அவர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. பேச்சளவில் கூட ஒகேனக்கல்லில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.

"புதிய கர்நாடக அரசு பதவி ஏற்றதும் தமிழகத்திற்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன்'' என்று சொன்னதற்கு என்ன அர்த்தம்? அப்படியானால் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றலாமா, இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்குத் தான் உள்ளது என்று ஒப்புக் கொள்கிறாரா? கர்நாடகத்திற்கு இல்லாத அதிகாரத்தை வழங்குகிறாரா? எ‌ன்று ஜெயல‌லிதா கே‌ள்‌வி எழு‌ப்‌‌பி உ‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்