கடையடைப்பு போராட்டம் தள்ளிவைப்பு: த.வெள்ளையன் அ‌றி‌வி‌ப்பு!

ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (11:46 IST)
ஒகேனக்கல் பிரச்சினைக்காக ஏ‌ப்ர‌ல் 8ஆ‌ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டு இருந்த கடையடைப்பு போராட்டம் முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்று த.வெள்ளையன் கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலத்துக் கனவு, தமிழர்களின் உரிமை. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும், அதுவரை பொறுமை காப்போம் என்றும் முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

பற்றி எரியும் தீயை இப்போதைக்கு அணைத்திடும் முயற்சியாக முதல்வரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் கர்நாடக அரசு ஒகேனக்கல் திட்டத்துக்கு ஒப்புதல் தராவிட்டால், தமிழகம் தக்கபதிலடி கொடுக்கும் என்பதையும் முதல்வர் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்.

எனவே முதல்வரின் அறைகூவலை ஏற்று, 8ஆ‌ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டு இருந்த கடையடைப்புப் போராட்டத்தை தள்ளிவைப்பது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு எடுத்து உள்ளது.

கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்து இருக்கிறோம் என்பதையும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால் அனைத்து தரப்பினருடன் இணைந்து எமது பேரவை எந்த நேரத்திலும் போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் எ‌ன்று வெ‌ள்ளைய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்