ஓசூரில் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளதை தொடர்ந்து சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று முதல் பெங்களூருரில் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டன. தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தமிழக அரசு பேருந்துகளை தாக்குவோம் என்று கன்னட வெறியர்கள் கூறியிருந்தால் தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளி என்ற இடத்தில் இன்று போராட்டம் நடத்தப் போவதாக கன்னட ஜாக்குருதி பேவிக்கே என்ற அமைப்பு அறிவித்திருந்தது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்பதற்காக கர்நாடக எல்லையிலும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரு மாநில எல்லைகளிலும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. சென்னை கோயம்பேட்டிலிருந்து பெங்களூருக்கு நாள்தோறும் கர்நாடக அரசுக்கு சொந்தமான 33 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசுக்கு சொந்தமான 25 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதையடுத்து அங்கு பதட்டம் நிலவுவதால் பயணிகள் பெங்களூர் செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.
கர்நாடக அரசுக்கு சொந்தமான ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிலும் குறைவான பயணிகளே இருந்தனர். மற்ற பேருந்துகள் அனைத்தும் கோயம் பேட்டில் நிறுத்தப்பட்டுள்ளன.
பேருந்து போக்குவரத்தை நிறுத்தும்படி தங்களுக்கு தகவல் எதுவும் வராததால் தொடர்ந்து ஒரு சில பேருந்துகளை இயக்கி வருவதாக கர்நாடக போக்குவரத்துக்கழக மேலாளர் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக பேருந்துகளை கன்னட வெறியர்கள் தாக்கும் போது அம்மாநில காவல் துறை வேடிக்கை பார்க்கிறது. இதனால்தான் நாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் பேருந்துகளை இயக்க விரும்பவில்லை என்று அரசு ஓட்டுனர்கள் கூறினர்.