மருத்துவக் கல்வி வளர்ச்சியில் மத்திய அரசு சாதனை : கிருஷ்ணசாமி பாராட்டு!
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (15:26 IST)
''மருத்துவக் கல்வி வளர்ச்சியில் மத்திய அரசு மகத்தான சாதனை படைத்துள்ளது'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வி வளர்ச்சி வரலாற்றில் புதிய நடவடிக்கையாக தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மத்திய பல்கலைக்கழக ஆட்சிக்குழு அங்கீகாரம் வழங்கியதற்காக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களுக்கும் மட்டும் இதுவரை அங்கீகாரம் தந்து அதற்கான மேம்பாட்டிற்கு அளித்து வருகிறது யு.ஜி.சி. நிறுவனம்.
தற்போது மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கும் அந்நிறுவனம் அங்கீகாரம் வழங்கியது மட்டுமல்ல, அதற்கான முதல் நடவடிக்கையாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அப்பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனைத்துத்துறை வளர்ச்சியிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, குறிப்பாக கல்வித்துறையிலும் அதிலும் மருத்துவக் கல்வியில் அரசின் சாதனையை இந்த நடவடிக்கை மூலம் அறிய முடிகிறது.
இதன் மூலம் மருத்துவக் கல்வி வளர்ச்சிக்கு பல்கலைக் கழக மானியக் குழுவிடமிருந்து போதிய நிதியுதவி கிடைக்கும். அதன் காரணமாக தமிழக மக்களின் சுகாதாரம் பேணிக் காக்க பல்வேறு வகையில் பெரிதும் வாய்ப்பாக அமையும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.