''ஓகேனக்கல் தமிழகத்தின் பகுதி, கர்நாடகத்துக்கு அதில் எந்த உரிமையுமில்லை'' என்று பா.ஜ.க மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
இது குறித்து குளித்தலையில் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் எந்தத் திட்டமும் இல்லை.
அமெரிக்கத் தேர்தலையொட்டி ஜூன் மாதத்துக்குள் அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்துவதால், இன்னும் 6 மாதங்களுக்குள் மத்தியில் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இத்திட்டத்துக்கு இடதுசாரி கட்சியினர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசியல் திசைக்காட்டி. அவர் எந்தப் பக்கம் செல்வார் எனத் தெரியாது. கம்யூனிஸ்ட் கட்சியினருடன் தி.மு.க.வுக்கு சரியான உடன்பாடு ஏற்படவில்லை. எனவே கூட்டணி மாறும் வாய்ப்பு உள்ளது. ஓகேனக்கல் தமிழகத்தின் பகுதி; கர்நாடகத்துக்கு அதில் எந்த உரிமையுமில்லை என்று எச்.ராஜா கூறியுள்ளார்.