மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சேத மதிப்பை கணக்கிட்டு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்'' என்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்கிற மழையால் விவசாயிகள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல், நீரில் மூழ்கி விட்டன.
உழுது பயிரிடுகின்ற நேரத்தில் தேவையானமழை பெய்யாமல் வஞ்சித்தது ஒரு பக்கம்; பயிர் வளர்கின்ற பருவத்தில் தேவைக்கு அதிகமாக மழை பெய்து நீரில் மூழ்கி, ஆரம்ப நிலையிலேயே நஷ்டம் ஏற்பட்டது.
விளைய வைத்து அறுவடை நெருங்கி விட்ட வேளையில், எதிர்பாராமல் பெய்து விட்ட பெருமழையால், வயலோடு வயலாக அனைத்தும் நீரில் மூழ்கி முற்றிலும் நஷ்டத்துக்கு உள்ளாகித் தவிக்கின்ற விவசாயிகளின் துயரம் தொடர்வது பெரும் வேதனைக்கு உரியது.
அறுவடை நிலையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, கண்ணீர் வெள்ளத்தில் தவிக்கின்ற விவசாயிகளின் வேதனைக்குத் தீர்வு காணும் வகையில், சேதத்தின் மதிப்பை முழுமையாகக் கணக்கிட்டு, ஏற்கத்தக்க நிவாரணத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.