ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்க‌ள் 8 பே‌ர் மாயம்!

புதன், 19 மார்ச் 2008 (11:23 IST)
ராமே‌ஸ்வர‌‌ம் பகு‌திக‌ளி‌ல் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலுக்கு சென்ற 2 படகுகள் மாயமாகி விட்டன. அதில் இருந்த 8 மீனவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை வரை பெய்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், சாத்தான்குளம், சிவகாசி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பெய்துள்ளது.

ராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. குறிப்பாக தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த ராமே‌ஸ்வரத்தை சேர்ந்த 2 விசைப்படகுகள் மாயமாகி விட்டன. இந்த படகில் இருந்த 8 பேரின் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.

இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்