''கட்சிக்கு அவப் பெயரும், களங்கமும் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த வழக்கறிஞர் ஜோதியுடன் கட்சியினர் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்'' அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் ஒப்புதலோடு அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தனக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்புடைய வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே நீதிமன்றத்தை விட்டு ஜோதி வெளி வந்தார். மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்லாமல் சென்னைக்குத் திரும்பி விட்டார்.
கடந்த 13ஆம் தேதி காலை அனுப்பிய கடிதத்தில், கட்சி சம்பந்தப்பட்ட வழக்குகள், கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் தொடர்புடைய வழக்குகள், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்குகள் என அனைத்தில் இருந்தும் தான் விலகுவதாகவும், வழக்குகள் தொடர்புடைய ஆவணங்களையும், கேஸ் கட்டுகளையும் பெற்றுக் கொள்ளுமாறும் ஜோதி தெரிவித்த செயல் வன்மையாகக் கண்டித்தக்கது. வழக்கறிஞர் தொழில் தர்மத்தையே படுகொலை செய்து புதைகுழியில் புதைக்கும் செயல்.
தான் நடத்திக் கொண்டிருந்த 113 வழக்குகள் பல்வேறு நிலைகளில், பல்வேறு நீதிமன்றங்களில், பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் இருக்கிற சூழலில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வழக்குகளில் இருந்து விலகிக் கொள்வது சட்டத்துறையில் இதுவரை கேள்விப்படாத இழிசெயலாகும்.
கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையிலும், கட்சிக்கு அவப் பெயரும், களங்கமும் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவருடன் கட்சியினர் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.