தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக்கான கூடுதல் கட்டடத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிதாகக் கட்டடங்கள் கட்டும் பணி முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் முடிவடைந்துள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில் இந்தப் பணி ஓராண்டிற்குள் நிறைவு பெறும்.
தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 38 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குக் கட்டடங்கள் இல்லை. இச் சுகாதார நிலையங்களுக்கு விரைவில் கட்டடங்கள் கட்டப்படும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவரை 3,000 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மருத்துவக் கழிவுகளை அழிக்க 30 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்று அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.