தமிழகத்தில் 8 காவல்துறை அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து!
சனி, 15 மார்ச் 2008 (11:22 IST)
தமிழகத்தில் எட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் 8 காவல் அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்றுள்ள காவல் அதிகாரிகள் வருமாறு:
நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜான் நிக்கல்சன், சென்னை தலைமையக துணை காவல் ஆணையர் வனிதா, சென்னை அசோக்நகர் காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வர் பவானீஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேன்மொழி, சென்னை மாதவரம் துணை ஆணையர் பன்னீர்செல்வம், சென்னை அம்பத்தூர் துணை ஆணையர் ஜோஷி நிர்மல்குமார், சென்னை கமாண்டோ படை சூப்பிரண்டு மனோகரன், கோவை ரூரல் சூப்பிரண்டு கார்த்திகேயன்.
தற்போது இவர்கள் அனைவரும் தமிழக காவல்துறை சர்வீசில் இருந்தனர். ஐ.பி.எஸ். அந்தஸ்து கிடைத்துள்ளதால், இனிமேல் இவர்களது பெயர் இந்திய காவல் பணி பட்டியலில் இடம் பெறும்.
ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்றுள்ளதால், இனிமேல் இவர்கள் சி.பி.ஐ., ஐ.பி. போன்ற மத்திய அரசின் காவல் பணிகளில் பணியாற்றலாம். இவர்கள் ஐ.பி.எஸ். அந்தஸ்தை முழுமையாக பெறுவதற்கு சுமார் ஒன்றரை மாத காலம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகாடமியில் விசேஷ பயிற்சி பெற வேண்டும்.