வங்கக்கடலில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மன்னார் வளைகுடாவில் இருந்து தென்மேற்கு வங்கக்கடல் வரை அதை ஒட்டியுள்ள கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதன்காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமானது முதல் சற்றே கனமான மழை பெய்யும். தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும், ராமேஸ்வரம் பகுதியிலும், கடலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்ச்சியான மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.