ரூ.1,468 கோடியில் மதுரவாயல்-துறைமுகத்துக்கு பறக்கும் சாலை: கருணாநிதி!
வெள்ளி, 14 மார்ச் 2008 (10:39 IST)
ரூ.1,468 கோடியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேரடியாக 'பறக்கும் சாலை' அமைக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அந்தரத்தில் `பறக்கும் சாலை' (எலிவேட்டட் ஹைவே) திட்டத்தினை செயல்படுத்துவது என்ற அரசின் கொள்கையின்பேரில் சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களுக்கு தனியே 'பறக்கும் சாலை' அமைக்கும் திட்டத்தினை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேரடியாக பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தினை ரூ.1,468 கோடியில் தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் இணைந்து செயல்படுத்த முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை தற்போதுள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மத்திய பகுதியில் பெரிய தூண்கள் அமைத்து அதன்மீது பறக்கும் சாலை அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, கோயம்பேடு பகுதியில் இருந்து சென்னை துறைமுகம் வரை கூவம் ஆற்றின் இடது கரையோரமாகவும் பறக்கும் விரைவு சாலை உருவாக்கப்படும்.
இத்திட்டத்துக்கு தேவையான அரசு நிலத்தை வழங்கவும், கூவம் கரையை இத்திட்டத்துக்கு பயன்படுத்திக்கொள்ளவும் தமிழக அரசு இசைவு அளித்ததுடன் இத்திட்டத்துக்கு தேவைப்படும் தனியார் நிலங்களை கையகப்படுத்தவும், இத்திட்டத்தினால் பாதிப்படையும் குடும்பங்களுக்கு மறு குடியமர்வு செய்யவும் ஏற்படும் உத்தேச செலவான ரூ.345 கோடியை தமிழக அரசும், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகமும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளவும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.