''சிறிலங்கா ராணுவத்திற்கு அளிக்கப்பட்டு வரும் ராணுவ பயிற்சியை உடனடியாக இந்திய அரசு நிறுத்த வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடந்த இலங்கை தமிழகர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும். சிறிலங்கா ராணுவத்திற்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் அணுகுமுறையிலும், நடவடிக்கைகளும் முற்றிலும் மாற வேண்டும். தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசிடம் தக்க விதத்தில் எடுத்துரைப்பதோடு, கச்சத்தீவை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் இன அழிப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே பல கடிதங்கள் எழுதி இருக்கிறேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. தமிழர்களிடத்தில் மிகப்பெரிய எழுச்சியை நாம் ஏற்படுத்த வேண்டும்.
சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி திருமாவளவனுடன் இணைந்து முடிவு செய்யப்படும். விரைவில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் கூறினார்.
திருமாவளவன்!
சென்னையில் நடந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், மத்திய அரசின் போக்கு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் எதிராக உள்ளது. இந்திய அரசின் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
தமிழ் ஈழம் விடுதலை பெற்று விடக்கூடாது என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. இதை நாம் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். இதனால் நமக்கு ஏதும் முத்திரை குத்தி விடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. சிறிலங்கா ராணுவத்துக்கு அளித்து வரும் பயிற்சியை இந்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ராமதாஸ் எடுக்கப்படும் முடிவுகளுக்கு விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் என்று திருமாவளவன் கூறினார்.