அருந்ததியருக்கு தனி உள் ஒதுக்கீடு: முத‌ல்வ‌ர் அறிவிப்பு!

வியாழன், 13 மார்ச் 2008 (10:58 IST)
''அருந்ததியின மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்தின் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுக்கும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழகத்தில் அருந்ததியின மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்ட‌த்‌தி‌ல் 26 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்‌தி‌ல் முதலமைச்சர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், சமுதாயத்தில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலே வாழும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆதி திராவிட மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் தி.மு.க. மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரம். இதில் ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம். தமிழ்நாட்டில் வாழும் ஆதி திராவிடர் இன மக்களில் 76 பிரிவினர் உள்ளனர். அவற்றில் அருந்ததியர் ஒரு பிரிவினர் ஆவர். ஆதிதிராவிடர் இன மக்களில் அருந்ததியினர் தமக்கு உள் இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர்.

மொத்த ஆதிதிராவிட மக்கள் தொகையான ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு 18 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு எனும்போது, அவர்களில் 13.06 ‌விழு‌க்காடான 15 லட்சத்து 48 ஆயிரம் பேரைக் கொண்ட அருந்ததியர் மற்றும் சக்கிலியருக்கு 2.35 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டி வரலாம்.

23.1.2008 அன்று தமிழகச் சட்டசபையில் பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையில், தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆதிதிராவிடர்களில் அருந்ததி இன மக்களின் கோரிக்கை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறும் அந்தக் கருத்துகளின் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுக்கும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்