தமிழகத்தில் 2,500 மெகாவாட் காற்றாலை மின்சாரம் தயாரிக்க திட்டம்!

புதன், 12 மார்ச் 2008 (11:12 IST)
தமிழகத்திலபதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 2,500 மெகாவாட் காற்றாலை மின்சாரம் தயாரிக்க திட்ட‌மி‌ட்டு‌ள்ளதாக ம‌த்‌தி‌ய இணை அமைச்சர் விலாஸ் முட்டம்வர் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினர் எஸ். அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு புதிய மற்றும் புதுப்பிக்க தக்க ஆற்றல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் விலாஸ் முட்டம்வர் அளித்த ப‌தி‌‌லி‌ல், இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல இடங்களில் வர்த்தக காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தி ஜெனரேட்டர் கருவி இறக்குமதியில் வரிச் சலுகை, கலால் வரி விலக்கு, காற்றாலை மின் திட்டங்களுக்கான பத்தாண்டு வரிச்சலுகை, இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் கடனுதவி, காற்று ஆய்வின் மூலம் ஆலை அமைப்பதற்கான இடங்களை தேர்ந்தெடுப்பதில் உதவி ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை கட்டண வசதி மற்றும் முனைய இடமாற்ற வசதிகள் ஆகிய சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 31.12.2007 வரை காற்றாலை மூலம் 7,844 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 3,712 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.

பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் 10,500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழக அரசும் 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், காற்று ஆதார ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.75 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்