குளித்தலை ஆசிரியை கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி!

செவ்வாய், 4 மார்ச் 2008 (15:51 IST)
குளித்தலை ஆசிரியை மீனாட்சி கற்பழித்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேரின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதியாகியுள்ளது.

குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியாராக பணிபுரிந்து வந்த மீனாட்சி கடந்த 2004 அக்டோபர் 19-ம் தேதி காணாமல் போனார். இது குறித்து நடந்த விசாரணையில், ஆசிரியை மீனாட்சி கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதும், அவரது உடல் புதைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 71 பேர் விசாரிக்கப்பட்ட நிலையில், இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டது. எனவே, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், எஸ்.பழனிவேலு ஆகியோர் அடங்கிய உயர் ‌நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, மனுதாரர் தரப்பு வாதங்கள் ஏற்பதாக இல்லாததால் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து, கீழ் நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்